கடந்த சில ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மந்தநிலை இது என்பதில் சந்தேகமே இல்லை. சில வல்லுநர்கள், இதுவரை சந்தித்ததிலே மிகப்பெரிய சரிவு என இதனைக் குறிப்பிடுகின்றனர். இந்த சரிவில் இருந்து மீளமுடியுமா என்பது குறித்து பார்ப்பதற்கு முன்  ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய சில தலைப்புச் செய்திகளை பார்ப்போம்.

  • ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 31 சதவீதம் சரிந்திருக்கிறது.
  • ஏப்ரல் முதல் இதுவரை 3.5 லட்சம் பணியாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள்.
  • இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் 15,000 பணியாளர்களையும், ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு லட்சம் பணியாளர்களையும் நீக்கி உள்ளன. இவை தவிர, பல விற்பனை மையங்கள் மூடப்பட்டதாலும் வேலை இழப்பு நடந்துள்ளது.
  • மாருதி, டாடா, ஹோண்டா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றன. மேலும் ரூ.35,000 கோடி மதிப்பிலான கார்கள் விற்பனையாகாமல் உள்ளன.
  • நாடு முழுவதும் 286 விற்பனை மையங்கள் மூடப்பட்டுள்ளன.
  • நடப்பு நிதி ஆண்டில் 1,700 பணியாளர்களை நிஸான் நீக்கவுள்ளது.

 

இந்த நிலை 2009-ம் ஆண்டை விட ஏன் கவலைக்குரியது?

2008-09-ம் ஆண்டு சூழலை விட தற்போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்தபோதும் விற்பனை கடுமையாக சரிந்திருக்கிறது. 2008-09 மற்றும் 2013-14 ஆகிய ஆண்டுகளிலும் இதேபோன்ற சூழல் இருந்தது. ஆனால் இந்த முறை  இரு சக்கர வாகனங்களில் இருந்து வர்த்தக வாகனங்கள் வரை அனைத்து பிரிவுகளில் விற்பனை மந்தமாக இருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக பயணிகள் வாகன விற்பனையில் 22 சதவீத சரிவும், இரு சக்கர வாகனப் பிரிவில் 13 சதவீத சரிவும், வர்த்தக வாகன பிரிவில் 14 சதவீத சரிவும் ஏற்பட்டிருக்கின்றன. தொடர்ந்து நான்கு மாதங்களாக சரிவைச் சந்திப்பதோடு, ஒவ்வொரு மாதமும் இந்த சரிவின் அளவு அதிகமாவதால், தற்போதைய சூழல் முன்னைக் காட்டிலும் அதிக கவலை தருவதாக இருக்கிறது.

 

அடுத்து என்ன நடக்கும்?

ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 1.35 சதவீதம் வரை குறைத்திருக்கிறது. ஆனால் இதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை. கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக இருக்கும் காரணத்தால் 12 சதவீத வாடிக்கையாளர்களுக்கு வாகன கடன் கிடைப்பதில்லை.  இன்னும் சில வல்லுநர்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் சூழல் இருந்தால் நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது.

தவிர, ஒழுங்குமுறை ஆணையங்களின் செயல்பாடு காரணமாகவும் வாகனங்களின் விலை அதிகரித்திருக்கிறது. வாகன பதிவுக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் ஒவ்வொரு மாநிலங்களும் சாலை வரியை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இன்ஷூரன்ஸ் பிரீமியமும் உயர்ந்து வருகிறது. மேலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் வாகனங்களுக்கு டிடீஎஸ் கட்டணமும் பிடிக்க வேண்டி இருக்கிறது. இதனால் வாகனங்களின் மொத்த விலை மிக அதிகமாக இருக்கிறது. இந்த விலையானது, வாகனம் வாங்கும் முடிவை பெரிதும் பாதிக்கிறது.

கிராமப்புற பொருளாதாரமும் தடுமாற்றத்தில் இருப்பதால, இந்த மந்த நிலை தொடர்கிறது..

 

எலெக்ட்ரிக் வாகனங்கள் காரணமா?

இந்த மந்த நிலைக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை காரணப்படுத்துவது நியாயமாகாது. தற்போதைய வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்பது மிக மிகக் குறைவு. முதல்கட்டமாக இரு சக்கர மற்றும் மூன்று சக்ர வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றவே அரசு திட்டமிட்டு வருகிறது. அதனால் மொத்த விற்பனை சரிவுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் காரணமாகாது.

 

நுகர்வோர் பழக்கம்

தரகட்டுப்பாடு (பிஎஸ் 6) அதிகரிக்கும் சூழலில் விலையும் அதிகரிக்கும் என பெரும்பாலான நுகர்வோர்கள் கருதினார்கள். இது கார் வாங்குவதற்கு சரியான நேரம் அல்ல என்பது வாடிக்கையாளர்களின் கருத்தாக இருக்கிறது.  இந்த நிலையில் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை விற்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் கவனம் செலுத்தியதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துளன.

 

மந்த நிலை மாறுமா?

தற்போது ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக இருக்கிறது. இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்துள்ளன.  வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (என்பிஎப்சி) பிரச்சினையை தீர்க்கும் பட்சத்தில்தான், வாகன கடன் வழங்குவது உயரும்.

எலெக்ட்ரிக் வாகனங்களை சாத்தியப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது மிகப் பெரிய சவால். மானியங்கள் மூலம் அரசு ஊக்கப்படுத்தினால் எலெக்ட்ரிக் வாகன விற்பனை உயரும்.

பெட்ரோல் பங்க், பெரிய குடியிருப்புகள், வர்த்தக வளாகங்களில் சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க வேண்டும். இதற்குப் பிறகே இந்தப் பிரிவு வளர்ச்சி அடையும்.

 

ஆட்டோமொபைலின் எதிர்காலம்?

தற்போதைய வாடிக்கையாளர்கள் அனைத்து தேவைகளுக்கும் தங்களது வாகனத்தையே  பயன்படுத்துகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வாகனம் பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கலாம்.  20 ஓலா ஓட்டுனர்களிடம் (சென்னை) ஒரு சர்வே நடத்தப்பட்டது. இதில் ஒரு நாளைக்கு 12 முறை சவாரி கிடைத்தால், 3 முதல் 6 முறை ஒரு வாடிக்கையாளர் அல்லது இரு வாடிக்கையாளர்கள் மட்டுமே வாகனத்தில் பயணிக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. ஒருவரோ, இருவரோ செல்ல  நான்கு சக்கர வாகனம் தேவையா?

2030-ம் ஆண்டில் இதே சூழல் இருக்காது. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வாகனம் பயன்படுத்தப்படலாம். வாகனத்தை வாங்குவதற்கு ஊக்கம் கொடுப்பதால் விற்பனை அதிகரிக்குமா அல்லது சந்தைக்கு ஏற்ப புதிய பிஸினஸ் மாடலை உருவாக்க வேண்டுமா? இன்னும் சில காலத்துக்குப் பிறகு இது குறித்த விவாதம் நடக்கும்.

”விமானமும், காரும் இணைந்து இருப்பது போன்ற வாகனம் எதிர்காலத்தில் வரலாம். இப்போது இது நகைப்புக்குரியதாக இருக்கும். ஆனால் இது நடக்கும்” என  1940-ம் ஆண்டிலே ஹென்றி ஃபோர்டு கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

Leave a Comment