சுரேஷ் சம்பந்தம்

வெற்றி அடைந்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. பெரும்பாலானோர் வெற்றி அடைந்த குடும்பங்களில் இருந்து வந்திருப்பார்கள். சில தொழில்முனைவோர்களுக்கு தேவைப்படும் நிதி அவர்களின் குடும்பத்தில்  இருந்து கிடைக்கும். சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்களாக இருப்பார்கள்.

இவை எதும் இல்லாமல் கூட சிலர் இருப்பார்கள். சமீபத்திய ஆய்வில் 8 சதவீத சி.இ.ஒ-கள் கல்லூரி படிப்பை முடிக்காதவர்கள். இவர்கள், சம்பந்தபட்ட துறையில் பணிபுரிந்த அறிவை மட்டுமே நம்பி தொழிலைத் தொடங்கி இருப்பார்கள். இவர்கள் உருவாக்கிய நட்பு வட்டாரங்கள் மற்றும் குழுக்களை நம்பியே தொழிலில் நடத்தி வருபவர்களாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன். கல்லூரி படிப்பை முடிக்காமல் நிறுவனத்தை தொடங்கி, தற்போது அந்த நிறுவனம் மில்லியன் டாலர்களில் வருமானத்தை ஈட்டி வருகிறது.

நான் கடந்த வந்த பாதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். இதையே நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் தெரிந்துகொள்ளுங்கள்.

என்னுடைய 17 வயதில் நான் கல்லூரிக்கு செல்லக்கூடிய நிலையில் குடும்ப சூழல் இல்லை. அப்பாவின் தொழிலுக்கு உதவி செய்யவேண்டிதாக இருந்தது. ஆனால் அந்த அனுபவம்தான் பின்னாளில் தொழில் தொடங்குவதற்கு உதவியாக இருந்தது. நான் வகுப்பறையில் கூட அந்தப் பாடங்களை கற்றுக்கொண்டிருக்க முடியாது.

கல்லூரிக்கு சென்று படிக்க முடியாது என்று முடிவெடுத்த பிறகு ஒரு சிறிய நிறுவனத்தில் கம்யூட்டர்  கோர்ஸ் படிக்கச் சென்றேன். அப்போது 20 டாலர் செலவானது. கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தொகை மிகப்பெரியது. ஆனாலும் கம்யூட்டர் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமானது. இந்த கோர்ஸை முடித்த பிறகு நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை தொடங்கினோம்.

கல்லூரியில் படிக்கும்போது கற்றுக்கொள்வதற்கு ஒரு எல்லை இருக்கும். தவிர உலகத்துடன் தொடர்பில்லாமல், அனுபவ அறிவில்லாமல், தியரியாக மட்டுமே படிப்பு இருக்கும். ஆனால் கம்யூட்டர் சென்டர் நடத்தியதில் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டறிய முடிந்தது. ஒரு வேளை கல்லூரியில் படித்திருந்தால் என்னுடைய முழு திறனையும் கண்டறிய முடியாமல்கூட போயிருக்கலாம்.

கல்லூரி படிப்பு இல்லை என்றாலும் கம்யூட்டர் சார்ந்த அறிவு இருந்தது. ஆனாலும் என்ஜினீயரிங் டிகிரி இல்லாமல் பெரு நிறுவனங்களில் வேலை கிடைப்பது சவாலாகவே இருந்தது. ஒருவழியாக ஹெச்பி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மற்றவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினையை என்னால் எளிதில் தீர்வு காண முடிந்தது. மற்றவர்களைப் போல் வழக்கமான வழியில் நான் கற்றுக் கொள்ளாததும் ஒரு காரணம் என்பது புரிந்தது. எனவே,  என்னுடைய வழியில் மேலும் தொடர்ந்து படித்தேன். அப்போது கற்றுக்கொண்டது என்னுடைய எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருந்தது.

 

தேர்வுக்காக அல்ல, ஆழ்ந்து உணர்ந்து படியுங்கள்

நான் படிக்கும்போது கற்றுக்கொண்டதை விட வேலையில் கற்றுக்கொண்டதே அதிகம். கல்விக்கென சில முறைகள் உள்ளன. பரிட்சையில் தேர்வானால் போதும் என்னும் மனநிலை இருக்கிறது. அதைத் தாண்டி படிக்க நினைப்பதில்லை. வேலை செய்யும்போது சிலர் பதவி உயர்வுக்காக அல்லது வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேலை செய்வார்கள். நான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்தேன். தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்றால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான அறிவு வேண்டும்.

தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளாரான ஜேம்ஸ் James Altucher ஒரு நேர்காணலில் கூறியிருந்தது முக்கியமானது. கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், வேலைக்கு தேவையான இதர பயிற்சி வகுப்புகளுக்கு சென்றிருக்கிறார். படிப்பதால் மட்டுமே வேலைக்கான தகுதி வந்துவிடாது என்பதுதான் ஜேம்ஸ் சொல்லும் காரணம்.

மேலும், நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படிப்பது என்பது எந்த துறையில் வேலைக்கு செல்லலாம் என்பது  குறித்த அடிப்படை அறிவை வளர்ப்பதற்கு மட்டுமே பயன்படும். மேலும் கல்லூரிக்கு பணத்தை செலவு செய்வதை விட, புத்தகங்களுக்கும் இதர ஆன்லைன் வகுப்புகளிலும் கவனம் செலுத்தினால் தொழில்முனைவோராகும் வாய்ப்பு உள்ளது. மேலும் தொழில் தொடங்குவதற்கு சரியான ஆலோசகர்கள் அவசியம். அவர்கள்தான்எந்த துறையில் செல்லலாம் என்பது குறித்து வழிநடத்த முடியும் என கூறியிருக்கிறார்.

 

குழு முக்கியம்.

கல்லூரியில் படிக்கும்போது தனியாக படித்து, தனியாக பரிட்சை எழுதி வெற்றி பெறலாம்.  ஆனால் தொழிலில் அது சாத்தியம் இல்லை. தொழிலில் குழுவாக இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். நான் நிறுவனத்தை தொடங்கியுடன் சரியான குழுவை கட்டமைப்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். திறமையும் நம்பகத்தன்மை கொண்ட குழுவும் அவசியம்.

உங்கள் தொழிலுக்கு தேவையான திறமையை வளர்த்துக்கொண்ட பிறகு, உங்கள் கவனத்தை குழுவை கட்டமைப்பதில் செலுத்துங்கள். ஹார்வேர்டு பிஸினஸ் ரிவ்யூ ஆய்வின் படி, 82 சதவீதத்தினர் தொழில்முனைவுக்கு தலைமைப் பண்பே அவசியம் என கூறியிருக்கிறார்கள்.

இதற்கு என்னால் முடிந்த சில ஆலோசனைகள் இதுதான். உங்கள் இலக்கினை குழுவுக்கு சரியாக கொண்டு சேருங்கள். நிறுவனத்துகென ஒரு கலாசாரத்தை உருவாக்குங்கள். உங்கள் குழுவுக்கு சரியான தலைவரை நியமனம் செய்யுங்கள்.

 

கடினமான பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்

கடினமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முறையான படிப்பு எதனையும் நான் படிக்கவில்லை. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பல மணி நேரங்கள் செலவு செய்து கற்றுக்கொண்டேன். இதையே என்னுடைய தொழில்முனைவு பாதையாக மாற்றிக்கொண்டேன். நீங்கள் கடினமான பிரச்சினையை தீர்க்கும் பட்சத்தில் வாடிக்கையாளர் கிடைப்பதோ அல்லது முதலீட்டாளர் கிடைப்பதோ பிரச்சினையாக இருக்காது.

உங்கள் முதலீட்டையும் நேரத்தையும் கடினமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செலவு செய்யுங்கள். உங்கள் புராடக்ட் அல்லது சேவையை மேம்படுத்துங்கள். முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற நிறுவனமாக உங்கள் நிறுவனம் இருக்கும்.

நீங்கள் கல்லூரி கல்வி படிக்கவில்லை என்றாலோ, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறக்காததாலோ உங்கள் தொழில்முனைவு வெற்றியடைய முடியாது என நினைக்கவேண்டாம். நீங்கள் ஏற்க மறுக்கும் காரணங்களே தொழிலுக்கு தேவையானதாக கூட இருக்கும். உங்கள் ஆரம்ப காலத்தை வைத்து நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டாம். உங்கள் வெற்றிக்கான பாதையை நீங்களே உருவாக்குங்கள்.

Leave a Comment