பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப கல்வியை கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்ட நிறுவனம் குவி (guvi). நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. செயல்படத் தொடங்கிய ஆறு மாதத்தில் லாபம் ஈட்ட ஆரம்பித்தது. நிறுவனம் வளரத் தொடங்கியதும் நிதி திரட்டும் பணியில் குவி இறங்கியது.  20-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் உரையாடி, இறுதியாக கிரே மேட்டர்ஸ் கேபிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றது. நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான அருண் உடன் நடத்திய உரையாடல் இதோ.

குவி தொடங்கப்பட்டது குறித்து கூறுங்கள்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனம் செயல்படத் தொடங்கிய ஆறு மாதத்திலேயே லாபம் ஈட்டத்  தொடங்கினோம். ஆரம்ப காலகட்டத்தில் நிறுவனர்களின் முதலீடு மூலம் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. அதனால் சந்தையில் ஏற்கெனவே அதிக சம்பளம் வாங்கியவர்களை நாங்கள் பணிக்கு எடுக்கவில்லை. முதல் ஆண்டு முழுவதும் விற்பனையை விட புராடக்ட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம். அதிக புராடக்ட்களை உருவாக்கிய பிறகு சுமார் 1.5 லட்சம் பயனாளர்கள் வரை எங்களுடன் இணைந்தனர்.

உங்களின் வளர்ச்சியில் திருப்புமுனையாக எதைக் கருதுகிறீர்கள்? உங்கள் வளர்ச்சிப் பாதை பற்றி கூறுங்கள்.

எங்களது புராடக்ட்களே காரணம். தொடக்கத்தில் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர தனியார் பல்கலைகழகங்கள் எங்களை அங்கீகரித்தன. முக்கியமான திருப்பமாக நாங்கள் கருதுவது, எங்கள் மூலமாக பெரு நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்ததைத் தான்.

முதலில் நாங்கள் பணியாளர்களை பயிற்சிக்கு எடுப்போம். அதனைத்  தொடர்ந்து பணியில் அமர்த்துவோம். இதன் மூலம் அவர்களுடைய திறன் அதிகரிக்கும். இதுவரை 60-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களில் எங்களிடம் பயிற்சிபெற்ற 5,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

தவிர கூகுள் நிறுவனம் லாஞ்ச்பேட் திட்டம் மூலம் எங்களை அங்கீகரித்திருக்கிறது. மேலும் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐடி ரிசர்ச் பார்க் உள்ளிட்ட அமைப்புகளும் எங்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ஆரம்பகாலம் எப்படிப்பட்டதாக இருந்தது?

நிறுவனம் விரிவடைவதற்கு முடிந்தவரை தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தினோம். தளத்தை உருவாக்குவதற்கே அதிகம் செலவு செய்தோம். கிட்டத்தட்ட 70 சதவீதம் இதற்கே செலவானது. எங்கள் குழுவே கன்டென்டை உருவாக்கியது. இப்போது முழுமையான பிஸினஸ் டு வாடிக்கையாளர்கள் நிறுவனமாகவே மாறிவிட்டோம்.

நாங்கள் அறிந்தவரை, 4 முதலீட்டு நிறுவனங்கள் குவி-யில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட பிறகும், அவை நடைபெறவில்லை. அதற்குக் காரணம் என்ன?

நீங்கள் சொல்வது சரிதான். சில முதலீட்டாளர்களிடம் 4 மாதங்களுக்கு மேலாக பேசி வந்தோம். ஆனால் ஒரே சமயத்தில் பல முதலீட்டாளர்களிடம் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் முதலீடு தள்ளிக்கொண்டே போனது. இதைவிட முக்கியம், எஜுடெக்  மற்றும் பிராந்திய மொழிகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கணிக்கவில்லை.

தற்போதைய முதலீட்டாளர் முதலீடு செய்ய என்ன காரணம்? இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

எங்கள் நிறுவனத்தின் அடிப்படைத்தன்மையை இந்த முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டனர். மேலும் எங்கள் குழுவின் உறுதியும் இலக்கும் முதலீட்டாளர்களுக்கு பிடித்திருந்தது. வீசாட் பிராந்திய மொழிகளில்  உரையாட வாய்ப்பு அளித்திருந்தது. இந்த நிகழ்வும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது. தற்போது கிடைத்திருக்கும் நிதியை நிறுவனத்தின் விரிவாக்கப்  பணிகளில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம்.

உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலை, மற்றும் திட்டங்கள்  குறித்து கூறுங்கள்

எங்களது தளத்தை 11 மாநிலங்களில் உள்ள 600 கல்லூரிகள் பயன்படுத்துகிறார்கள். 5 பிராந்திய மொழிகளில் கன்டென்ட் உள்ளது. தவிர ஆங்கிலத்திலும் உள்ளது. 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 1.5 லட்சம் பயனாளர்கள் உள்ளனர்.

நிறுவனங்களிடம் பேசி, அவர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப புராடக்ட்களை உருவாக்கி வருகிறோம். இதற்கு `ஜென் கிளாஸஸ்’ என  பெயரிட்டிருக்கிறோம். 60 நாட்களில் இந்த கோர்ஸை முடிக்கலாம். புராடக்ட் நிறுவனங்கள் நேரடியாக மாணவர்களிடம் உரையாட முடியும். அதனால் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை?

சந்தைக்கு தேவையான புராடக்ட்டை உருவாக்குங்கள். நிதி தானாக தேடி வரும். வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை?

சந்தைக்கு தேவையான புராடக்ட்டை உருவாக்குங்கள். நிதி தானாக தேடி வரும். வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

Leave a Comment